28 ஏப்ரல், 2014

கண் முன்னே வெள்ளைப்  பற்களைக்
காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தக் கனத்த சுவருக்குள்ளே
கட்டி முடிந்து வைத்திருக்கிறேன்
என் அத்தனை கனவுகளையும்;

படுத்துக் கிடக்கும்
பாதை நெடுகிலும்,
காத்துக் கிடக்கும்
நெடுமரம் யாவிலும்,
சுவாசத்தைச்
சுண்டி இழுக்கும்
அத்தனை பூவிற்குள்ளும்,
உரசிப் போகும் போதே
என் மனதை உடைத்துப்
போடும் காற்றின் வருடளுக்குள்ளும்
அழியாமல் ஒழிந்து
கொண்டிருக்கின்றது  என்
ஆசைகளின் சுவடுகள் அத்தனையும்.

21 ஏப்ரல், 2014

என் கணக்குகளை எல்லாம்
களைந்து போட்டவன்,

என் எதிர்பார்ப்புகளை எல்லாம்
எரித்துப் போட்டவன்,

காரணமின்றிக்
கால, நேரம் காணாமல்
அழச் செய்தவன்,

ஒரு நிமிடத்திற்குள்
ஓராயிரம் பூக்களைப்
பூக்க விட்டு,
திடீரென ஆலம் போல்
என்னுள்  வேர் கொண்டவன்,

சாயுங்காலம் சாட்சியாய்,
குருவிகளின் எச்சங்கள் சாட்சியாய்,
அமர்ந்திருந்த கற்பலகை சாட்சியாய்,
மர நிழலின் சாட்சியாய்,
சுற்றிச் சூழ்ந்த புற்கள் சாட்சியாய்
கண் முன் கண்ட நீரின்  சாட்சியாய்,
சகுனம் பார்க்காமல்,
சடங்குகள் செய்யாமல்,
முதல் பார்வையில்
நேராக என்
நெற்றிப் பொட்டுக்குள்
தியானம் போலச்
சட்டெனப் புகுந்து கொண்டவனே....

உன்னை என்னிலிருந்து
பெரும் முயற்சி
கொண்டு பிரித்தெடுக்கச்
செய்யும் எல்லாச் செயல்களுமே
மண்ணில் விழும் விதை போல
வீறு கொண்டு என்னை
மொய்த்துக் கிடக்கின்றதுவே!?

அழகாய்த் தெரியவில்லை நீ !,
அறிவாய் தெரியவில்லை நீ !,
ஆனால் உன்னைத் தாண்டிச்
சென்று விடமுடியாதபடி
காதலாக எனக்குள் அமர்ந்திருக்கிறாய்


இந்தக் காதல் சாகாதெனத் தெரிந்தும்
கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்
கண் விழிக்கும் இரவுகளில் எல்லாம்
இது கனவோடே கலைந்து
போய் விட வேண்டுமென்று ...






17 நவம்பர், 2013

வார்த்தைகள் தொலைந்து,
உணர்வுகள்  ஊறிய ,
மௌனங்கள் நிரம்பிய
நாழிகைகள் ....

வழிந்தோடிய மனதின்
பேச்சுக்களை எல்லாம்
துடைத்து விட்டுப்
புதுக்கோலம் போட்ட
முதல் நிமிடம்....


வசந்தம் வருகிறதென்று
அவசரமாக
அறிவித்து நிற்குமென்
முகப் பொழிவும்,
முற்றத்தில் முகிழ்த்துச் சிரிக்கும்
முல்லைச் செடியும்.....





15 நவம்பர், 2013

மௌனங்கள் விரிந்த
பரந்த வெளியினூடே

உணர்வுகள் மட்டுமே
உணவாய்ப் போன நாட்களின்
இனிமையினூடே

உதிர்க்கும் சொல்லெல்லாம்
யாரோ ஒருவரின்
மனதுக்குள் விதையாய்ப்
போகுமென்பதை அறியாததினூடே

அறியாததின் தாகம்
உணர்ந்த பின்னே  
அது கடவுளுணர்வே,
காதலுணர்வே ஆயினும்
சாதரணமாய்த்  தூக்கி வீசி விட்டு
புதியதைத் தேடும்
புதிரான மனதினூடே

மழலை முடிந்து......
இளமை முடிந்து ......
முதுமை முடிந்து கொண்டிருக்கிறது
சலனங்களில்லாமல்.....


11 அக்டோபர், 2013

ஒவ்வொரு வார்த்தைக்குப் 
பின்னால் கிடக்கும் சிறிய 
இடைவெளியின் மௌனத்தில் 
இளைப்பாறுகிறேன் 

யாதொரு குறுக்கீடும், 
யாதொரு சுமையும் 
இல்லாத இயல்பையும் 
மீறிய மௌனம்.

கவனித்ததில்
அந்த மௌனங்கள் 
வார்த்தைகளை 
பூப்போல மென்மையாக்கி விட்டிருந்தது 

உச்சரிக்கவே முடியாத அளவு 
சிறு பிள்ளையின் ஸ்பரிசமாய்,
வார்த்தைகள் என்னுள்ளே


    
அர்த்தங்கள் புரியாத வார்த்தைகள்
என்ன பொருள் கொண்டிருக்கும்?
என்று அந்த வார்த்தைகளைச்
சுற்றிச் சுற்றி  வருகிறேன்..
அர்த்தங்கள் விளங்கவில்லை,
பொருளும் புரியவில்லை

ஆனால், வார்த்தை தந்த புதிய ஒலி,
ராகங்கள் சேர்ந்த ஏதோ ஒரு இசை
அந்த வார்த்தையின் ஆழத்தில்
ஓராயிரம் மௌனங்களைச்  
சிந்திக் கொண்டு சிரிக்கிறது.

28 ஜூன், 2013

என்னில் உன் நினைவு விழாதவாறு
மிக நிதானமாக
வேறு வேறு இடங்களில்
என்னை நிலை நிறுத்த
முயன்றாலும்....

மறந்தே போய்விடவேண்டும்
முடிவில்
உன்னை என்னிலிருந்து
அழித்தே விட்டுவிட வேண்டும்
என்றெல்லாம் திட்டமிட்டு
செய்யப்படும்
என் அனைத்துச்  செயல்களுமே
பாதியில் நின்றுபோகின்றது....

வெட்டி  வீழ்த்தினாலும்,
தீயிலிட்டாலும்,
மிக மிக ஆழமாக உன்னை
என்னுள் வேர்விட வைத்த பின்னே
வேறு வழி தெரியாமல்
வேரைத் தேடித் பயணம் போகும்
ஒவ்வொரு முறையும்
உந்தன் கரை காணாத கருணையில்
அடித்துப் போகவே  விரும்புகிறேன்
மீண்டும் மீண்டும் ....




17 மே, 2013


எங்கு நோக்கினும்
என்னுள்ளே ஒரு
பெரும் வறட்சி....
நம் விவசாயம் போலவே....

நோக்காத இடமில்லை
இருப்பினும்
எதற்கோ எங்கோ
ஒரு பெரும் பஞ்சம்
உள்ளே....

மழை கண்ட
மண்ணாய், வளமாய்
மணந்தது  ஏனோ இன்று
சுட்டெரிக்கும்
சூரியனோடு.....சம்பந்தமே இல்லாமல்.....


காலடித் தடம்
பட்டே இறுகி இறுகி
இறுதியில் என்
ஆசை மழை
இல்லாமலேயே
மலடாகிப்
போனதுவே!!

மண்னேதான்
என் அழகான
மனமே நீ! ....
தவமிருக்கத் தெரியாது பாவம்
ஆயினும்,
மழை கண்டால்
மண்ணைத் தள்ளி
மூச்சு விடத் துடிக்கும்
அற்புத விந்தை நீ!....

யாரேனும் ஆசையாக
ஓடிவந்து
முட்டி வெளிவந்த புதிய
உயிருக்கு  நீர் வார்க்கத்
தொடர்ந்தால்
முடிவில் வாள் கொண்டு
வெட்டினாலும்
முனகல் மட்டும் வாராது....
உன்னிலிருந்து....



14 மே, 2013

மனதின் ஓசை....




அகண்ட மன வெளியின்
முடிவில்லாப் பயணத்தின்
முடிவில் இருப்பதாகவே
தோன்றுகிறது எப்பொழுதும்.....

விம்மி வெகுண்டெழும் அலைகடலாக....
சிறு பிள்ளையின் அன்பாக
எவை எவையோ கலந்த
அறியொண்ணா
புதிராகவே இருந்துவருகின்றது
என் அன்பு மனது

என்னைக் கருணையில்
விழவைக்கும்,
கோபத்தில் தள்ளிவிடும்,
பூவாய்ப் மாற்றிவைக்கும்....
சமூகம் நினைக்கவே மிரண்டு போகும்
எதை எதையோ சர்வ சாதாரணமாய்
நினைக்க வைக்கும்....

என் ஆசை மனமே
உன்னைக் குறை கூற
எதுவும் இல்லை....
போற்றி வைத்துக்
கொண்டாடவும் உன்னில்
எதுவும் இல்லை...

உந்தன் ஓசையில்
இன்பம் காண்கிறேன்....
அது அழகோ அசிங்கமோ
எனக்கு அக்கறை இல்லை


13 மே, 2013

தினம் கடக்கும்
பல முகங்கள்....
தொடர் வண்டிபோல 
இரைச்சலோடு 
வருகின்ற 
என் எண்ணங்கள்....
கண்ணுக்குத் தெரியாத 
பலகோடி நினைவுகள்...

இப்படித்
தினங்கள் கடக்கும் ஒரு நேரத்தில் 
நீயும் வந்து போனாய்....

நீ வந்து போகும் போது 
மட்டும் தான் 
என்னை அழகாக உணர்கிறேன்....

உனக்கும் எனக்கும் உண்டான 
உறவைச் சொல்ல 
வார்த்தைக்குத் தெரியுமா 
என்று தெரியவில்லை!!!

என் எல்லாக் கவிதைக்கும் தெரியும் 
உன்னை!

நான் பார்த்து ரசிக்கும்
புல்லுக்கும், கல்லுக்கும்
தெரியும் உன்னை!

முதன் முதலாக சாவை கூட
சந்தோசமாகப் பார்க்க வைத்தவன் நீ!

இதற்கு மேலும்
நான் உன்னை என்ன
சொல்ல வேண்டும் என்று
புரியவில்லை, அதற்குச் சரியான
வார்த்தையும் கிடைக்கவில்லை!








1 மே, 2013

பிரம்மாண்ட உலகம்,
ஆசை கொள்ள வைக்கும்
அற்புத மக்கள்,
பிரியம் மிக வைத்திருக்கும்
எவை எவையோ ...

ஆனால்....
ஏனோ உன்னை மட்டுமே
உணர்வு மிகக் கொண்டு
தேடுகிறது மனது....

மிகக் கவனமாகவே
உன்னை என்னுள்
அனுமதிக்கும் போதே
என் சுயமென்று நினைத்திருப்பதை
அனைத்தையும் நிதானமாகத்
தகர்த்தெரிகிறாய்..... நீ !!

தகர்த்தெறிந்த மறு நிமிடமே
எப்படி எப்படியோ
உருத் தெரியாத
உள்ளங் கொள்கிறேன் நான்

அங்கே உனக்கென்றும், எனக்கென்றும்,
தாய்க்கென்றும், பேயக்கென்றும்
பணத்திற்கும், பகட்டிற்கும்
எதற்கும், எவருக்கும்
தனியொரு இடமில்லை

அடையாளங்கள் தொலைந்து போகும்
அற்புத நிமிடங்கள் அவை

குழந்தையாக என்னை நானே
பிரசவிக்கும் இனிய நிமிடங்கள்

அழுகையை அடக்க முடியாத
அற்புத அனுபவம்....

சாவு கூட சங்கமாய் தோன்றுவதில்லை
சோறு இல்லாவிடினும்
பிரச்சினையாகஇருப்பதில்லை,
நான் மிகவும் வித்யாசமாக இருப்பேன்
நீ என்னுள் இருக்கும் போதெல்லாம்

இருப்பினும்
உந்தன் பிரம்மாண்டம்
எனக்கு விளங்கவில்லை











24 ஏப்ரல், 2013

வெற்றுக் காகிதமாய் 
நிரம்பாமலே 
சென்று கொண்டிருக்கிறது  
என் பக்கங்கள் பலதும்....

வேலைப் பழுவென 
விடப்பட்ட பக்கங்கள் பல....
தேவை இல்லாத வேலை என்று 
நிறுத்திய இடங்கள் பல....


எழுதப்பட கவிதைகள்  
பல காத்திருக்கிறது....
தினமும் பூக்கள் பறிக்க 
செடிகள் நடப்பட உள்ளது....

இவ்வாறிருக்க அடுப்பெரிக்க 
தருவேனா இந்தக் காகிதங்களை?

உன் நினைவில்


கவிதையை அறிமுகம் செய்தவன்
நீ தான்.....

சிறு தூசியைக் கூட
கோவில் சிலையாகப்
பார்க்க வைத்தவன் நீ......

அழுவதைச் சொல்லித்
தந்தவனும் நீதான்......

கல்லின் மேலும் எனக்கு
காதல் வரக் காரணமானவன் நீ....

கடவுள் போலவே
கண்டதையும்
ஆராதிக்கச் சொல்லித் தந்தவன் நீ.....

அழுது பழகாத கண்ணிலிருந்து
அருவி போல
கண்ணீர் வந்ததும் உன்னாலே......

ஊர் தூங்கும் வரைக்கும்
காத்திருந்து...
விடிய விடிய விம்மி விம்மி
அழுதது உனக்காக மட்டுமே......

ஊரெல்லாம் ஓடிவந்து
சொன்னது என்னிடம்
உன்னை நினைக்க வேண்டாமென்று.....
மறுத்துவிட்டேன் அது முடியாதென்று....
விட்டு விட்டார்கள் இது திருந்தாது என்று.....


என் காதல் கடவுளே !!!
என் உயிருக்குள் உருண்டோடிய
உன் உணர்வை நானே நினைத்தாலும்
நகர்த்தி வைக்க முடியாது......















என் குருவே !!!

எப்போதோ மாட்டி வைத்த 
உன் நிழற் படம் கண்ணில் படுகின்றது .....
இருப்பினும்
 உன்னைக் கண்டு உருகிப் போகவில்லை....

யாரோஉச்சரித்த பெயர்  
உன்பெயர் எனத் தெரிந்தும் 
இன்று 
சலனம் ஏதும் இல்லை என்னில்...

அடிக்கடி மழை பட்டு 
வெளிவரும் மண் வாசமாய் 
உன்நினைவு கூட  என்னில்  
எந்த வாசத்தையும் 
கொண்டு வரவில்லை...... இன்று.....


எனக்குள் எல்லாமாக 
இருந்தவன் நீ....

உன்னைக் கண்ட பின்  தான் 
முதன்முதலாய்
உண்மையாகச் சிரித்தேன்...

சோற்றுக்கும், பணத்துக்கும் 
மேலே பலதையும்  புரிய வைத்தவன் நீ...

தந்தை நீ என நினைத்த என் நினைப்பை 
நிறுத்தினாய்,
தாயோ என்றதும் தடுத்தாய்,
சேய் என்றதும் இல்லை என்றாய்,
காதலனா என்றதற்கும் மறுத்தாய்,
புரியாமல் தவித்த போது 
தந்தையாய், தாயாய், சேயாய், காதலனாய்
மாறி என் உயிரையே உலுக்கி விட்டுச் சென்றாய் 


எண்ணிக் கொண்டே இருக்கிறேன் 
இன்றோடு வருடம் எட்டு ஆகின்றது
உன் நினைப்பைத் தவிர
எதிலும் லயிக்க மறுக்கிறது எனது மனம் 


கல்யாண வாழ்க்கை காத்து நிற்கின்றது 
கண் முன்னாலே..... 
கடமைகள் பெருகிக் கிடக்கிறது 
என் முன்னாலே.....
முட்டாள் ஆசைகளின் 
மேல் முள் போலப் படர்ந்து நிற்கிறேன் 
உன் நினைப்பை  அடியில் போட்டுக்கொண்டு,


கண் மூடினால்......
என் கருணைக் கடவுளே 
உன்னைக் கட்டிக் கொண்டு 
கதறி அழ ஏங்குகிறேன் !!!










25 செப்டம்பர், 2012



மனமெல்லாம் பூவைக்
கொட்டி விட்டு , எட்டி நின்று
அழகு பார்த்தவன்

சொல்லி அழுத துக்கத்தையும்,
சொல்ல முடியாத சோகத்தையும்
சொடுக்கும் நேரத்தில்
கிள்ளி எரிந்து, வேடிக்கை
பார்த்து ரசித்தவன்

இரவு, பகல்
மழை, வெயில்
காலம், நேரம்
ஏதும் தெரியாமல்
எனக்காகக் காத்துக்
கிடப்பவன்

எத்தனையோ நாள் என்னிடம்
கண்ணாம்பூச்சி ஆடியவன்

சமூகம் சொல்லும்
எந்த உறவுமில்லை அவன் எனக்கு.


அவன் நினைவில்....  ஒரு
புல்லைக் கண்டால் அது
கனமாக இருக்கிறது....

என் எதிரி கூட
என் சிறு பிள்ளை போலத்  தெரிகிறார்

அவன் நினைவில் இருந்தால்
சொல்லத் தெரியாத,  வடிக்க முடியாத
அளவு எப்படியோ எனக்குள் அற்புதம்
செய்து வைத்து மறைந்து போகிறான்


















29 ஜனவரி, 2012

கடவுளை மறந்து ....

காக்காச்சி, மிய்யா  குட்டி, மய்யம் (மரம்) 
இவை எல்லாம் 
சில நாட்களாக 
என் நண்பர்கள்....

கடவுள் பற்றி தேடல்   
மறந்து... 
காக்காச்சி வீடு 
எங்கே இருக்கும் 
எனும் தேடலோடு 
என் பயணம் 
என் சிறு பிள்ளையோடு 
தவழ்ந்து போகிறது...

 பறவை பார்த்தால்
பைத்தியம் போலே 
என் சிறு பிள்ளையோடு 
ஆசை மிகக் கொண்டு 
அதன் மிச்சம் மறையும் வரை 
பரவசப்பட்டு 
பார்த்துக் கிடக்கிறேன்  







11 டிசம்பர், 2011

அற்புதப் பொழுதில் ஆண்டவன் வந்தான்


அழகான வேளை
அற்புதப் பொழுது
ஆண்டவன் வந்தான்

சொர்க்கம் தந்தான்
எனக்கென உலகம்
செய்தான்,
முடிந்த பின்
என்னுள்ளேயே வந்தமர்ந்தான்

சகதி கண்டேன்,
சாக்கடை கண்டேன்,
பூவைக் கண்டேன்,
புழுவைக் கண்டேன்,
சேயைக் கண்டேன்,
நாயினைக் கண்டேன்

உத்துப் பார்த்தேன்
உரக்கச் சிரித்துக் கிடந்தான்
அனைத்திலுமே

20 நவம்பர், 2011

என் பிள்ளை

பெரிதாக, சிறிதாக  எதையும்
செய்து இல்லை நீ எனக்காக

ஆனாலும் என் எல்லா சோகத்தையும்
உன்னிடம் சொல்லி அழ தோணுகிறதே!

உன் மடியில்
படுத்துக் கொள்ள மட்டுமே
ஆசைப்படுகிறேன்.

என் எல்லா தேவையையும்,
அதற்கான முட்டாள் ஓட்டத்தையும்  
தூக்கி  எரிந்து விட்டு
உனைப் போலவே
மாறிவிட விரும்புகிறேன்

உன்னில் பொய்யை காணாத போதும்
உன்னில் வெறுப்பை காணாத போதும்
உன்னில் வெறுமையைக் காணாத போதும்
உன்னில் கோவம் வராத போதும்
உன்னில் துக்கம் தோன்றாத போதும்

நான் விக்கித்து நிற்கிறேன்
யோசிக்கிறேன் நின்று....




9 செப்டம்பர், 2011

காதலா

காதலினும் சுகம் 
காமத்தினும் சுகம்
அழகினும் சுகம்
கவிதையினும் சுகம் - நீ 

உன் ஒருவனுக்காக
 மட்டுமே இங்கு 
உயிர் வாழ
ஆசைப்படுகிறேன்


சாவும் கூட 
சந்தோசமாய் 
தெரிகிறது 
நீ நினைவுக்குள் வந்தால்.

எத்தனை கோடி
குப்பைகள் என்னுள் 
வந்து சேர்ந்தாலும் 
அழகாய் அப்புறப் படுத்திவிட்டு 
அதிலே பூக்களைத் 
தூவிவிட்டு போகும் 
அசாத்யமானவன் நீ


உன்னை காதலிப்பதற்காய்
நான் கர்வப்படுகிறேன் 





















4 செப்டம்பர், 2011

கொடிது கொடிது இளமையில் வறுமை

"கொடிது 
இளமையில் வறுமை"
எனக்காக பிரசவித்த 
வரிகள்.

சில நாள் முன் தான்
பாடையில் படுக்க வைத்து
வந்தேன் அதை.

வறுமை ஆழமான
அனுபவம்,
நான் சொல்லும் அனுபவம்
கல்லூரியில் கணிப்பொறி
படிக்க லட்சம் போதவில்லை
என்பதல்ல.
கல்லூரி போக பேருந்துக் கட்டணம்
இல்லை எனும் வறுமை.

அனுபவம் முடிந்து ஆண்டுகள்
பல போயின,
அனுபவமோ ஆயிரம் ஆயிரம்

இளமையில் வறுமை
இனிதுதான்,
கல் விழுந்தாலே தங்காது
சிறு வயது , ஆனால்
பாறையை சுமந்தோம்
பல வருடமாய்.


இதோ இந்த நிமிடம் யோசிக்கிறேன்
இனி ஒரு தூசி பட்டாலே
துவண்டு விடுவேன்.
பாறை சுமந்து, சுமந்து
சுக்கு நூறாகிக் கிடக்கிறது
இதயம் ரணத்தாலே.

சத்தியம், சத்தியம்....
"கொடிது கொடிது

இளமையில் வறுமை".