21 ஏப்ரல், 2014

என் கணக்குகளை எல்லாம்
களைந்து போட்டவன்,

என் எதிர்பார்ப்புகளை எல்லாம்
எரித்துப் போட்டவன்,

காரணமின்றிக்
கால, நேரம் காணாமல்
அழச் செய்தவன்,

ஒரு நிமிடத்திற்குள்
ஓராயிரம் பூக்களைப்
பூக்க விட்டு,
திடீரென ஆலம் போல்
என்னுள்  வேர் கொண்டவன்,

சாயுங்காலம் சாட்சியாய்,
குருவிகளின் எச்சங்கள் சாட்சியாய்,
அமர்ந்திருந்த கற்பலகை சாட்சியாய்,
மர நிழலின் சாட்சியாய்,
சுற்றிச் சூழ்ந்த புற்கள் சாட்சியாய்
கண் முன் கண்ட நீரின்  சாட்சியாய்,
சகுனம் பார்க்காமல்,
சடங்குகள் செய்யாமல்,
முதல் பார்வையில்
நேராக என்
நெற்றிப் பொட்டுக்குள்
தியானம் போலச்
சட்டெனப் புகுந்து கொண்டவனே....

உன்னை என்னிலிருந்து
பெரும் முயற்சி
கொண்டு பிரித்தெடுக்கச்
செய்யும் எல்லாச் செயல்களுமே
மண்ணில் விழும் விதை போல
வீறு கொண்டு என்னை
மொய்த்துக் கிடக்கின்றதுவே!?

அழகாய்த் தெரியவில்லை நீ !,
அறிவாய் தெரியவில்லை நீ !,
ஆனால் உன்னைத் தாண்டிச்
சென்று விடமுடியாதபடி
காதலாக எனக்குள் அமர்ந்திருக்கிறாய்


இந்தக் காதல் சாகாதெனத் தெரிந்தும்
கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்
கண் விழிக்கும் இரவுகளில் எல்லாம்
இது கனவோடே கலைந்து
போய் விட வேண்டுமென்று ...