28 ஏப்ரல், 2014

கண் முன்னே வெள்ளைப்  பற்களைக்
காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தக் கனத்த சுவருக்குள்ளே
கட்டி முடிந்து வைத்திருக்கிறேன்
என் அத்தனை கனவுகளையும்;

படுத்துக் கிடக்கும்
பாதை நெடுகிலும்,
காத்துக் கிடக்கும்
நெடுமரம் யாவிலும்,
சுவாசத்தைச்
சுண்டி இழுக்கும்
அத்தனை பூவிற்குள்ளும்,
உரசிப் போகும் போதே
என் மனதை உடைத்துப்
போடும் காற்றின் வருடளுக்குள்ளும்
அழியாமல் ஒழிந்து
கொண்டிருக்கின்றது  என்
ஆசைகளின் சுவடுகள் அத்தனையும்.

21 ஏப்ரல், 2014

என் கணக்குகளை எல்லாம்
களைந்து போட்டவன்,

என் எதிர்பார்ப்புகளை எல்லாம்
எரித்துப் போட்டவன்,

காரணமின்றிக்
கால, நேரம் காணாமல்
அழச் செய்தவன்,

ஒரு நிமிடத்திற்குள்
ஓராயிரம் பூக்களைப்
பூக்க விட்டு,
திடீரென ஆலம் போல்
என்னுள்  வேர் கொண்டவன்,

சாயுங்காலம் சாட்சியாய்,
குருவிகளின் எச்சங்கள் சாட்சியாய்,
அமர்ந்திருந்த கற்பலகை சாட்சியாய்,
மர நிழலின் சாட்சியாய்,
சுற்றிச் சூழ்ந்த புற்கள் சாட்சியாய்
கண் முன் கண்ட நீரின்  சாட்சியாய்,
சகுனம் பார்க்காமல்,
சடங்குகள் செய்யாமல்,
முதல் பார்வையில்
நேராக என்
நெற்றிப் பொட்டுக்குள்
தியானம் போலச்
சட்டெனப் புகுந்து கொண்டவனே....

உன்னை என்னிலிருந்து
பெரும் முயற்சி
கொண்டு பிரித்தெடுக்கச்
செய்யும் எல்லாச் செயல்களுமே
மண்ணில் விழும் விதை போல
வீறு கொண்டு என்னை
மொய்த்துக் கிடக்கின்றதுவே!?

அழகாய்த் தெரியவில்லை நீ !,
அறிவாய் தெரியவில்லை நீ !,
ஆனால் உன்னைத் தாண்டிச்
சென்று விடமுடியாதபடி
காதலாக எனக்குள் அமர்ந்திருக்கிறாய்


இந்தக் காதல் சாகாதெனத் தெரிந்தும்
கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறேன்
கண் விழிக்கும் இரவுகளில் எல்லாம்
இது கனவோடே கலைந்து
போய் விட வேண்டுமென்று ...






17 நவம்பர், 2013

வார்த்தைகள் தொலைந்து,
உணர்வுகள்  ஊறிய ,
மௌனங்கள் நிரம்பிய
நாழிகைகள் ....

வழிந்தோடிய மனதின்
பேச்சுக்களை எல்லாம்
துடைத்து விட்டுப்
புதுக்கோலம் போட்ட
முதல் நிமிடம்....


வசந்தம் வருகிறதென்று
அவசரமாக
அறிவித்து நிற்குமென்
முகப் பொழிவும்,
முற்றத்தில் முகிழ்த்துச் சிரிக்கும்
முல்லைச் செடியும்.....





15 நவம்பர், 2013

மௌனங்கள் விரிந்த
பரந்த வெளியினூடே

உணர்வுகள் மட்டுமே
உணவாய்ப் போன நாட்களின்
இனிமையினூடே

உதிர்க்கும் சொல்லெல்லாம்
யாரோ ஒருவரின்
மனதுக்குள் விதையாய்ப்
போகுமென்பதை அறியாததினூடே

அறியாததின் தாகம்
உணர்ந்த பின்னே  
அது கடவுளுணர்வே,
காதலுணர்வே ஆயினும்
சாதரணமாய்த்  தூக்கி வீசி விட்டு
புதியதைத் தேடும்
புதிரான மனதினூடே

மழலை முடிந்து......
இளமை முடிந்து ......
முதுமை முடிந்து கொண்டிருக்கிறது
சலனங்களில்லாமல்.....


11 அக்டோபர், 2013

ஒவ்வொரு வார்த்தைக்குப் 
பின்னால் கிடக்கும் சிறிய 
இடைவெளியின் மௌனத்தில் 
இளைப்பாறுகிறேன் 

யாதொரு குறுக்கீடும், 
யாதொரு சுமையும் 
இல்லாத இயல்பையும் 
மீறிய மௌனம்.

கவனித்ததில்
அந்த மௌனங்கள் 
வார்த்தைகளை 
பூப்போல மென்மையாக்கி விட்டிருந்தது 

உச்சரிக்கவே முடியாத அளவு 
சிறு பிள்ளையின் ஸ்பரிசமாய்,
வார்த்தைகள் என்னுள்ளே


    
அர்த்தங்கள் புரியாத வார்த்தைகள்
என்ன பொருள் கொண்டிருக்கும்?
என்று அந்த வார்த்தைகளைச்
சுற்றிச் சுற்றி  வருகிறேன்..
அர்த்தங்கள் விளங்கவில்லை,
பொருளும் புரியவில்லை

ஆனால், வார்த்தை தந்த புதிய ஒலி,
ராகங்கள் சேர்ந்த ஏதோ ஒரு இசை
அந்த வார்த்தையின் ஆழத்தில்
ஓராயிரம் மௌனங்களைச்  
சிந்திக் கொண்டு சிரிக்கிறது.

28 ஜூன், 2013

என்னில் உன் நினைவு விழாதவாறு
மிக நிதானமாக
வேறு வேறு இடங்களில்
என்னை நிலை நிறுத்த
முயன்றாலும்....

மறந்தே போய்விடவேண்டும்
முடிவில்
உன்னை என்னிலிருந்து
அழித்தே விட்டுவிட வேண்டும்
என்றெல்லாம் திட்டமிட்டு
செய்யப்படும்
என் அனைத்துச்  செயல்களுமே
பாதியில் நின்றுபோகின்றது....

வெட்டி  வீழ்த்தினாலும்,
தீயிலிட்டாலும்,
மிக மிக ஆழமாக உன்னை
என்னுள் வேர்விட வைத்த பின்னே
வேறு வழி தெரியாமல்
வேரைத் தேடித் பயணம் போகும்
ஒவ்வொரு முறையும்
உந்தன் கரை காணாத கருணையில்
அடித்துப் போகவே  விரும்புகிறேன்
மீண்டும் மீண்டும் ....




17 மே, 2013


எங்கு நோக்கினும்
என்னுள்ளே ஒரு
பெரும் வறட்சி....
நம் விவசாயம் போலவே....

நோக்காத இடமில்லை
இருப்பினும்
எதற்கோ எங்கோ
ஒரு பெரும் பஞ்சம்
உள்ளே....

மழை கண்ட
மண்ணாய், வளமாய்
மணந்தது  ஏனோ இன்று
சுட்டெரிக்கும்
சூரியனோடு.....சம்பந்தமே இல்லாமல்.....


காலடித் தடம்
பட்டே இறுகி இறுகி
இறுதியில் என்
ஆசை மழை
இல்லாமலேயே
மலடாகிப்
போனதுவே!!

மண்னேதான்
என் அழகான
மனமே நீ! ....
தவமிருக்கத் தெரியாது பாவம்
ஆயினும்,
மழை கண்டால்
மண்ணைத் தள்ளி
மூச்சு விடத் துடிக்கும்
அற்புத விந்தை நீ!....

யாரேனும் ஆசையாக
ஓடிவந்து
முட்டி வெளிவந்த புதிய
உயிருக்கு  நீர் வார்க்கத்
தொடர்ந்தால்
முடிவில் வாள் கொண்டு
வெட்டினாலும்
முனகல் மட்டும் வாராது....
உன்னிலிருந்து....



14 மே, 2013

மனதின் ஓசை....




அகண்ட மன வெளியின்
முடிவில்லாப் பயணத்தின்
முடிவில் இருப்பதாகவே
தோன்றுகிறது எப்பொழுதும்.....

விம்மி வெகுண்டெழும் அலைகடலாக....
சிறு பிள்ளையின் அன்பாக
எவை எவையோ கலந்த
அறியொண்ணா
புதிராகவே இருந்துவருகின்றது
என் அன்பு மனது

என்னைக் கருணையில்
விழவைக்கும்,
கோபத்தில் தள்ளிவிடும்,
பூவாய்ப் மாற்றிவைக்கும்....
சமூகம் நினைக்கவே மிரண்டு போகும்
எதை எதையோ சர்வ சாதாரணமாய்
நினைக்க வைக்கும்....

என் ஆசை மனமே
உன்னைக் குறை கூற
எதுவும் இல்லை....
போற்றி வைத்துக்
கொண்டாடவும் உன்னில்
எதுவும் இல்லை...

உந்தன் ஓசையில்
இன்பம் காண்கிறேன்....
அது அழகோ அசிங்கமோ
எனக்கு அக்கறை இல்லை


13 மே, 2013

தினம் கடக்கும்
பல முகங்கள்....
தொடர் வண்டிபோல 
இரைச்சலோடு 
வருகின்ற 
என் எண்ணங்கள்....
கண்ணுக்குத் தெரியாத 
பலகோடி நினைவுகள்...

இப்படித்
தினங்கள் கடக்கும் ஒரு நேரத்தில் 
நீயும் வந்து போனாய்....

நீ வந்து போகும் போது 
மட்டும் தான் 
என்னை அழகாக உணர்கிறேன்....

உனக்கும் எனக்கும் உண்டான 
உறவைச் சொல்ல 
வார்த்தைக்குத் தெரியுமா 
என்று தெரியவில்லை!!!

என் எல்லாக் கவிதைக்கும் தெரியும் 
உன்னை!

நான் பார்த்து ரசிக்கும்
புல்லுக்கும், கல்லுக்கும்
தெரியும் உன்னை!

முதன் முதலாக சாவை கூட
சந்தோசமாகப் பார்க்க வைத்தவன் நீ!

இதற்கு மேலும்
நான் உன்னை என்ன
சொல்ல வேண்டும் என்று
புரியவில்லை, அதற்குச் சரியான
வார்த்தையும் கிடைக்கவில்லை!